பக்கம் எண் :

40கவியரசர் முடியரசன் படைப்புகள் - 2

24
முன்னையர் வாழ்வு
-

வாணிகம் செய்தநம் முன்னையர் கண்டநல்
    வாழ்வினைக் கூறுவன் கேட்டிடுவீர்
தோணிகள் ஓட்டினர் சூழ்கடல் சுற்றினர்
    சூட்டினர் நம்புகழ் நாட்டினரே

ஆழ்கடல் ஆயினும் சூழ்புயல் ஆயினும்
    அஞ்சில ராகிய நெஞ்சினராய்க்
கீழ்கடல் மேல்கடல் யாவினும் ஓடினர்
    கிட்டும் நிதிக்குவை விஞ்சினரே

தெற்குக் கடல்தனில் கொற்கைத் துறைதனில்
    தேடிக் கிடைத்தநன் முத்துக்களை
விற்கத் திசைதொறும் சென்றனர் பொற்குவை
    வேண்டிய மட்டுங் குவித்தனரே

மீனக் கொடியுடன் காணப் படுங்கலம்
    மேலைக் கடல்தனில் ஓடிவரும்
மானப் புலிக்கொடி விற்கொடி ஏந்திய
    வங்கங்கள் தென்கடல் கூடிவரும்

மெல்லிய நற்றுகில் பட்டுடை பொன்மணி
    மேவிப் படர்தரு செம்பவழ
வல்லியும் நல்லகில் ஆரமும் ஆதிய
    வாரிக் கொடுத்தது நம்புவியே