பக்கம் எண் :

காவியப் பாவை45

28
நாட்டு வாழ்த்து
-

வாழ்க தமிழகம் வாழ்க தமிழகம்
    வாழ்க தமிழகமே!
சூழ்கடல் மூன்றொடு வேங்கடம் எல்லையாய்த்
    தோன்றுக தாயகமே!

நல்லவர் ஆட்சியில் தங்கி வளர்ந்திடும்
    நாடு செழித்திடவே!
அல்லவை நீங்கிட நாட்டினிற் செந்தமிழ்
    ஆட்சி தழைத் திடவே!

வான முகட்டினைத் தொட்டு நிமிர்ந்திடும்
    மாமலைத் தாயகமே
கானம் இசைத்திடும் பேரரு வித்திரள்
    காட்டி மிளிர்த்திடுமே!

ஓடிய ஆறுகள் மெல்லிய கால்களை
    ஊன்றிய ஊர்களெல்லாம்
கூடிய செந்நெலின் ஆடிய பைங்கதிர்
    கோலம் விளைத்திடுமே!

தெண்கடல் முத்தொடு சேர்ந்து படர்ந்திடும்
    செம்பவளக் கொடியும்
மண்ணதில் தங்கமும் வல்லிரும் பின்னன
    வாழ்ந்திடும் தாயகமே!

கல்வி வளர்ந்திடப் பண்பு செழித்திடக்
    கற்றவர் வாழியவே!
செல்வ மிகுந்திட எங்களின் தாயகம்
    சீருடன் வாழியவே!