பக்கம் எண் :

46கவியரசர் முடியரசன் படைப்புகள் - 2

29
இனிப் பொறுக்க முடியாது

-
எடுப்பு

இன்னும் பொறுத்திருக்க இயலாது - சும்மா
இருக்கின்றீர் மணங்கொள்ள முயலாது

-இன்னும்

தொடுப்பு

கன்னமெல்லாம் சிவந்த காரணம் யாதென்று
கடிந்துரைத்தாள் அன்னை கலங்க வைத்தாள் என்னை

-இன்னும்

முடிப்பு

சோறுண்ண மறுத்தால் சூதென்ன சொல்லென்பாள்
தூங்குதூங் கென்று வாங்கிடுவாள் உயிரை
வேறென்ன செய்தாலும் விளையாட மறுத்தாலும்
வியப்பாள் தந்தையொடு கலப்பாள் முறைப்பாள்

-இன்னும்

உடல்வேறு பாடுகளை உன்னித்து நோக்குகிறாள்
உறவுமுறை யிலொரு மாப்பிள்ளை தேடுகிறாள்
மடல்சேரும் தாழைமரச் சோலைக்கு வாருங்கள்
மணம்வைக்கும் நாள்தன்னை மாதென்பால் கூறுங்கள்

-இன்னும்