பக்கம் எண் :

காவியப் பாவை49

32
இன்னும் வரக்காணேன்!

-
எடுப்பு

இந்நேரமாகியும் காணேனே - காலையில்
எழுந்திருந்து சென்றவர்-இந்நேரம்

தொடுப்பு

தென்னைமர நிழல்வந்து தெருவாயிற் படிஓரம்
சேர்ந்ததே! ஒன்பது மணிச்சங்கும் ஓய்ந்ததே

-இந்நேரம்

முடிப்பு

எக்காலும் ஆர்வமாய் உண்பார் என்றெண்ணி
என்நாதன் மனம்மகிழ எழுந்தோடி நான்செய்த
சிக்கான நூல்போன்ற இடியப்பம் வீணாகச்
சில்லிட்டுப் போகுதே! நெஞ்சமும் நோகுதே!

-இந்நேரம்

வரும்வழியில் எவரேனும் வாய்கிளறி விட்டாரோ
வம்பெதற்கோ அரசாங்கப் பேச்சைத்தான் தொட்டாரோ?
தரும்சுவையில் மேலான தமிழென்றால் உயிராச்சே!
தாய்மொழியின் நிலையத்தான் உரையாடி நின்றாரோ?

-இந்நேரம்