பக்கம் எண் :

54கவியரசர் முடியரசன் படைப்புகள் - 2

37
நடந்தது என்ன?
-

செவிலி :

அன்னம் தளர்ந்திட முன்னம் நடந்தவள்
ஆடி நடந்தனள் கண்ணம்மா - இதில்
என்ன நடந்தது பொன்னம்மா - கதை
எங்கு நிகழ்ந்தது சொல்லம்மா

தோழி :

கொண்டை முடித்திரு தண்டை ஒலித்தெழில்
கொஞ்ச நடந்தனள் சோலையே - காதல்
கொண்டு தொடர்ந்தொரு காளையே - இந்தக்
கோலம் விளைத்தனன் மாலையே

செவிலி :

கன்னம் சிவந்தது கண்ணும் சிவந்தது
கன்னி தளர்ந்தனள் கண்ணம்மா - எது
முன்னஞ் சிவந்தது செல்லம்மா - கதை
முற்றும் விளங்கிடச் சொல்லம்மா

தோழி :

கட்டி யணைத்தவன் முத்தங் கொடுத்திடக்
கன்னஞ் சிவந்தது முன்னமே - இடை
தொட்டுப் பயின்றவன் சின்னமே - விழி
செக்கச் சிவந்தனள் அன்னமே