பக்கம் எண் :

64கவியரசர் முடியரசன் படைப்புகள் - 2

43
ஆற்றங்கரைக் காதலி
-

ஆற்றங் கரையினிலே - ஒரு நாள்
    ஆடி அமர்ந்திருந்தேன்
நாற்ற மலர்வீச - நடந்து
    நங்கை ஒருத்திவந்தாள்
கூற்று நிகர்கண்ணால் - என்னையே
    கொல்வது போல்நடந்தாள்
காற்றெனப் பின்தொடர்ந்தேன் - மெல்லிய
    கைம்மலர் பற்றிவிட்டேன்

சட்டென நின்றுவிட்டாள் - மார்பில்
    சாய்த்துக்கொண் டங்குநின்றேன்
விட்டு விடும்என்றாள் - உயிரை
    விட்டிட நான்விரும்பேன்
கட்டிய பெண்போல - என்பால்
    காதல் மொழிசொன்னீர்
மட்டிலா அன்புகொண்டால் - மனத்தை
    மாற்ற லரிதென்றாள்

மந்திர மில்லாமல் - ஓதும்
    மறையவர் இல்லாமல்
சந்தன மில்லாமல் - தாலிச்
    சரடுமே இல்லாமல்
அந்தஇடம் மணந்தோம் - சான்றும்
    அகமன்றி வேறில்லை
தொந்திர வில்லாமல் - நாங்கள்
    துணைவர்களாகி விட்டோம்