பக்கம் எண் :

காவியப் பாவை65

பஞ்சணை தூங்கிடுவேன் - தமிழால்
    பாடி எழுப்பிடுவாள்
கொஞ்சு மொழிபேசி - வெந்நீர்
    குளித்திட வாருமென்பாள்
நெஞ்சினில் அன்பொழுக - அப்பம்
    நெய்யொழுகத் தருவாள்
வஞ்சி விடைதருவாய் - என்றால்
    வாள்விழி காட்டிடுவாள்

சென்றிடு வேன்அலுவல் - மனையில்
    செய்வன செய்திடுவேன்
ஒன்றும் மணியோசை - கேட்டால்
    ஓடிடு வேன்அவள்பால்
முன்றினில் நின்றிருப்பாள் - வாயின்
    முத்துக்கள் காட்டிடுவாள்
கன்றிடத் தந்திடுவாள் - முத்தம்
    கணக்கில் அடங்காவே

உடைகளை மாற்றிவிட்டுக் - காற்றில்
    உலவிடச் சென்றிடுவோம்
கடைகளும் சென்றிடுவோம் - நல்ல
    கட்டுப்பூ வாங்கிடுவாள்
நடைஎழில் காட்டிஅவள் - அரும்பு
    நகைத்திடப் பால்கொணர்வாள்
தடையொன்றும் இல்லாமல் - இன்பம்
    தந்திடு வாளவளே