பக்கம் எண் :

66கவியரசர் முடியரசன் படைப்புகள் - 2

44
ஆடுவோம் பாடுவோம்
-

கொஞ்சு மொழிபேசும் மங்கையரே இங்குக்
கூடி மகிழ்ந்துநாம் ஆடிடுவோம் - இனிப்
பஞ்சமெ லாமொழிந் தின்பமே பொங்கிடப்
பாற்பொங்கல் பற்றியே பாடிடுவோம்

சர்க்கரைப் பொங்கலும் வெண்ணிறப் பொங்கலும்
சாற்றுக் கரும்புடன் சேர்த்துவைத்து - வாழை
நற்கனி பற்பல உண்டு மகிழ்ந்திட
நாம்படைப் போமடி காதலர்க்கு

பாளை விரித்திடும் தென்னைம ரக்காவின்
பக்கத்திலே மக்கள் கூட்டத்திலே - நாளை
காளை தழுவிடும் காதலர் வீரத்தைக்
கண்டு மகிழ்ந்துநாம் பாடிடுவோம்

அண்ணன்மார் தம்பிமார் ஐயாவும் சேர்ந்துண்ண
ஆக்கிப் படைக்கின்றோம் அன்புப்பொங்கல் - உண்டு
பண்ணிசைப் பாரவர் பாட்டினுக் கேற்பவே
பாவைய ரேமகிழ்ந் தாடிடுவோம்

வீட்டுக்குள் ளேதிரு நாட்டுக்குள் ளேபகை
ஓட்டிடுவோம் அன்பு காட்டிடுவோம் - இதைக்
கேட்டு மகிழ்ந்திட வந்தது தைப்பொங்கல்
கேடுகள் நீங்கிடப் பாடிடுவோம்

வாழ்க தமிழினம் வாழ்க தமிழ்மொழி
வாழிய வாழிய வான்மழையே - எங்கும்
வாழ்க மகிழ்வன்பு வாழிய நானிலம்
வாழ்த்துவம் வாழ்த்துவம் மங்கையரே!