பக்கம் எண் :

காவியப் பாவை75

50
புண்படுமா?
-

மாணவச் செல்வங்களே - நும்பால்
    மாசுகள் நேர்கையிலே
நாணிடப் பேசிடுவான் - உங்கள்
    நன்மையை நாடிடுவான்

குற்றம் புரிந்துவிடின் - உங்கள்
    கொள்கை திரிந்துவிடின்
சற்றும் தயங்கலிலான் - வன்சொல்
    சாற்றிட முன்வருவான்

புண்படும் உங்கள் மனம் - என்று
    பூட்டிய வாயினனாய்க்
கண்படை கொள்ளுவனேல் - ஆசான்
    கல்வியைக் காப்பவனோ?

நோயினைத் தீர்ப்பதற்கே - கற்ற
    நூலின் மருத்துவன்பால்
போயுடல் காட்டிடுங்கால் - அப்பிணி
    போக்குதற் கீவதென்ன?

வெல்லமும் சர்க்கரையும் - தந்தால்
    வேதனை தீர்ந்திடுமோ?
சொல்லவுங் கைக்குதம்மா - அந்தச்
    சூரண மாத்திரைகள்!