பக்கம் எண் :

86கவியரசர் முடியரசன் படைப்புகள் - 2

57
இன்பத்தின் நிழல்
-

நல்லதோர் யாழினை பெற்றுவந்தேன் - அதை
    நானெடுத் தேஇசை மீட்டிநின்றேன்
மெல்லிசை என்செவி பாய்கையிலே - அதில்
    மேவிய ஓர்நரம் பற்றதடா!

செந்தமிழ்க் காவியம் செய்துவைத்தேன் - அதில்
    சிந்தனை யாவையும் பெய்து வைத்தேன்
வந்தது வாழ்வென நம்பிநின்றேன் - அது
    மண்ணிற் புதைந்து சிதைந்ததடா!

பச்சைப் பசுங்கிளி பாய்ந்துவந்தே - என்பால்
    பாச முடன்மொழி பேசியதே
இச்சைஎலாம் அதில் வைத்திருந்தேன் - மனம்
    ஏங்கிடப் பூனையும் கவ்வியதே!

கண்கவர் சிற்பமொன் றாக்கிவைத்தேன் - அதில்
    கற்பனை யாவையும் தேக்கிவைத்தேன்
புண்பட என்மனம் ஆனதடா - அந்தப்
    பொற்சிலை பாழ்பட்டுப் போனதடா!

புத்துலகம் ஒன்று நான்படைத்தேன் - அதில்
    பொன்னிற மாளிகை கட்டிவைத்தேன்
பித்தனைப் போல்மனம் பேதுறவே - அதில்
    பேரிடி ஒன்று விழுந்ததடா!


கவிஞரின் ஐயாட்டைப் பருவத்து ஆண்மகன் இயற்கை எய்தியபொழுது மனம் வெம்பிப் பாடியது - 1959