பக்கம் எண் :

காவியப் பாவை87

58
இரண்டும் உண்டு
-

இன்பம் ஒருகரை துன்பம் ஒருகரை
இரண்டும் கொண்ட ஆறடா - வாழ்வு
இரண்டும் கொண்ட ஆறடா
இரண்டு கரையும் இல்லை என்றால்
வறண்டு போகும் பாரடா - இதைத்
தெரிந்து நெஞ்சம் தேறடா!

வரவும் உண்டு செலவும் உண்டு
வாழ்க்கை என்ற ஏட்டிலே - நம்
வாழ்க்கை என்ற ஏட்டிலே
பிறப்பும் இறப்பும் பிணைந்து தோன்றும்
பெருமை யுண்டு நாட்டிலே - இதைப்
பேசுமே குறள் பாட்டிலே!

இரவும் பகலும் இரண்டும் ஒன்றாய்
இணைந்த தேஒரு நாளடா - ஒன்றாய்
இணைந்த தேஒரு நாளடா
இரண்டும் உலகில் மாறிமாறி
இயங்கும் உண்மை கேளடா - இதை
எண்ணி மண்ணில் வாழடா!


மகனைப் பிரிந்த துயரம் தீரப் பாடியது.