பக்கம் எண் :

காவியப் பாவை95

65
ஆடு மயிலே!

-
எடுப்பு

ஆடுமயிலே நடம் ஆடுமயிலே
ஆடுங்கலைக் கழகு தேடுமயிலே

முடிப்பு

விண்ணகத்துக் கார்முகிலைக் கண்டு மகிழ்ந்தாய்
விஞ்சுமெழில் தோகைதனை மெல்ல விரித்தாய்
கண்ணிமைக்க நேரமின்றிக் கண்டு மகிழ்ந்தேன்
கற்பனையைத் தூண்டிவிட்டாய் ஆடு மயிலே

பண்ணமைக்கும் பாவலர்கள் பாடும் பொருளாய்ப்
பயில்வல்ல ஓவியர்கள் தேடும் பொருளாய்
வண்ணவகைக் கண்படைத்த தோகைமயிலே
வட்டமிட்டு வட்டமிட்டே ஆடு மயிலே

கெண்டைவிழி மாதர்களுன் அண்டை வருவார்
கெஞ்சியுன்றன் சாயல்பெறச் சண்டை இடுவார்
கொண்டைமயில் வென்றோமென்று கொண்டு திரிவார்
கோதையர் செருக்கடக்கி ஆடு மயிலே

கண்டவர்கள் நெஞ்சுருக ஆடி வருவாய்
கற்றவர்கள் மெச்சுதமிழ் பாடி மகிழ்வாய்
எண்டிசையும் எங்கள் புகழ்கூடி வரவே
எக்களிப்பு மிக்குவர ஆடு மயிலே