கவியரங்கில் முடியரசன் | 101 |
மண்ணுக்குள் பொன்விளைத்து மாண்புயர்ந்த தென்னாட்டில் எண்ணெய்க்கும் நல்ல இரும்புக்கும் பங்குண்(டு) அணுவாற்றல் செய்யும் அரும்பொருளும் உண்டு நுணுகின் கனிப்பொருள்கள் நூறுண்டு நம்நாட்டில்; வள நாடு ஆற்றுப் புனலும் அருகாது பொங்கிவரும் ஊற்றுப் புனலும் உவந்தூட்டும் நீர்நாடு கற்புவளம் வீரவளம் காட்டுதற்குக் கண்ணகியின் பொற்புருவம் அஃதொன்றே போதுமன்றோ? மேலான ஓவியமும் கட்டடமும் ஓங்குபுகழ்ச் சிற்பமுடன் காவியமும் காட்டும் கலைவளங்கள் சேர்நாடு சோற்றுவளம் ஆற்றுவளம் சொல்லரிய கல்விவளம் மாற்றுயர்ந்த தங்கவளம் மாசில்லா முத்துவளம் எல்லைவளம் மக்கள்வளம் இவ்வளவும் பெற்றுயர்ந்து தொல்லுலகில் மூத்துத் துளிர்க்குந் திருநாடாம்; ஏன் தாழ்ந்தது? இந்த வளநாட்டார் ஏழைகளாய்க் கூலிகளாய் நொந்து பிறநாடு நோக்கிப் புகுவதுமேன்? நாட்டு வளமெல்லாம் மாற்றான் சுரண்டிநமை ஓட்டாண்டி யாக்கி ஒடுக்கியதா லன்றோ? மடக்கும்பிடிப்பகற்றி வாழ்வோமேல் இங்குக் கிடைக்கும் வளமெல்லாம் கேடின்றி நாம்பெறுவோம்;
வாகைசூட வாரீர்! நாட்டுக்கு வேண்டும் நலம்பெற்ற நம்நாட்டை வேட்டைக் களமாக்கும் வேற்றுப் புலத்தார்க்குத் தாள்பணிந்து மாளாதீர்! தாவிப் புறப்படுவீர்! வாழ்விழந்து போகாமல் வாகை பெறவாரீர்! தன்னாட்சி பெற்றுத் தனியரசாய் வாழ்ந்திடுவோம் பன்னாட்டுப் பேரவையில் பங்குபெற்று வாழ்வோம்நாம்
|