பக்கம் எண் :

கவியரங்கில் முடியரசன் 103

16. உறவினர்

எண்சீர் விருத்தம்

தென்னாடு தன்னுரிமை பெறுதல் வேண்டித்
    தெளிந்துரைத்த நல்லறிஞர் கொள்கை தன்னால்

என்னோடும் உறவாகித் தலைமை தாங்கும்
    எழிற்கவிஞ! கவியரங்கம் ஏறி நெஞ்சில்

அன்போடு நாவினிக்கத் தமிழைப் பாடும்
    அத்தொழிலால் உறவினர்கள்! திருக்குறட்குத்

துன்போடு போராடி வெற்றி கண்ட
    சுற்றத்தீர்! என்னினத்தீர்! வணங்கு கின்றேன்(1)

தந்தைவழி தாய்வழியில் உறவு மில்லை
    தம்பிதங்கை அண்ணனென ஒருவ ரில்லை

எந்தவழி சுற்றினுமோர் பங்கு கேட்கும்
    தாயத்தார் எவருமில்லை; உறவெ னக்குச்

செந்தமிழ்தான்; ஈதன்றி மனைவி மக்கள்
    உறவினராச் செப்புதற்கிங் கிருக்கின் றார்;நான்

எந்தவழி உறவினரைக் காட்ட வல்லேன்?
    இருப்பினுமென் கற்பனையில் காட்டு கின்றேன்(2)

முப்போகம் விளைகின்ற நன்செய் உண்டு
    முகில்குளிரச் செய்கின்ற தோப்பும் உண்டு

தப்பாது விளைகின்ற புன்செய் உண்டு
    தங்கநகை துணிமணிகள் அனைத்தும் உண்டு