பக்கம் எண் :

106கவியரசர் முடியரசன் படைப்புகள் - 3

துள்ளிவிளை யாடுவதால் என்மேற் குற்றம்
    துணிந்துரையார்; பகைமாற்றி உறவை ஆக்கும்

வெள்ளையப்பன் புரிகின்ற விளையாட் டெல்லாம்
    விரித்துரைப்பின் விந்தையினும் விந்தை யன்றோ!(9)

உறவான ஒருவர்திரு மணத்துக் காக
    *ஒள்ளிழையை மக்களுடன் அழைத்துச் சென்றேன்,

மெருகோடு விளங்குமுயர் உந்து வண்டி
    விட்டிறங்கி நிற்பதன்முன் மணத்து வீட்டார்

வருகவரு கென்றெனக்கு மாலை சூட்டி
    வரவேற்ற காட்சியினைக் கண்டோர் அங்கு

வருகின்ற மணமகனோ என்ற யிர்த்து,**
    வாழ்வரசி அருகிருக்க ஐயம் விட்டார்(10)

நான்பெற்ற செல்வத்தை எடுத்துக் கொஞ்சி
    நலமிக்க கன்னத்தைச் சிவக்க வைத்தார்;

“தேன்பெற்ற சொற்பேசும் சித்தி ரங்கள்
    தெளிவாகத் தங்களையே வார்த்தெ டுத்தாற்

போன்றிருக்கக் காண்கின்றோம்” என்று ரைத்தார்;
    புதல்வரெல்லாம் என்மனையாள் போன்றி ருந்தும்

தேன்சொட்டப் புனைந்துரைத்த உறவின் மாந்தர்
    திருவிளையாட் டெடுத்துரைத்தல் இயல்வ தொன்றோ? (11)

“தண்ணீரோ வெந்நீரோ குளிப்ப தற்கு?
    தமக்கென்று தனியறையும் ஒதுக்கி விட்டோம்;

உண்பீரோ இவ்வுணவு? களைத்தி ருப்பீர்!
    ஓய்வுகொளத் துயிலுங்கள்” என்று ரைத்து


*ஒள்ளிழை - ஒளிபொருந்திய நகைகளை அணிந்த மனைவி
**அயிர்த்து - ஐயங்கொண்டு