கவியரங்கில் முடியரசன் | 107 |
மண்மகளைக் காணாது விரித்து வைத்த மலர்மெத்தை தலையணைகள் காட்டி நின்று பண்பாடி அருகிருந்து தாளம் போட்டுப் பல்வரிசை காட்டுகிற உறவு கண்டேன்(12) விரைந்துவரும் பொழுதத்துச் சட்டைப் பொத்தான் விட்டுவந்தேன்; உறவினர்கள் அதனைக் கண்டு மறைந்திருந்து பேசுகின்றார் “அடடா இந்த மனிதரிடம் எளிமையைத்தான் காண்பீர்! செல்வம் நிறைந்தவர்கள் இப்படித்தான் இருத்தல் வேண்டும்; நிறைகுடங்கள் எப்போதும் தளும்பா அன்றோ? குறைந்தவர்தாம் கூத்தடிப்பர்” என்று தம்முள் கூறுவது செவியில்விழ நகைத்துக் கொண்டேன்(13) சின்னாளில் வணிகத்தில் நட்டங் கண்டேன் சேர்ந்தடித்த பெரும்புயலால் வயல்கள் கெட்டேன் பொன்னகைகள் மாளிகைகள் ஒற்றி வைத்தேன் பொருள்முட்டுப் பாடடைந்து துயரால் நொந்தேன்; எந்நாளும் என்வீட்டில் உண்டு வந்த எண்ணில்லா உறவினரைக் காண வில்லை; பின்னோடித் தேடினுமே *அஞ்ச லென்று பேசுதற்கோர் ஆளில்லை தனித்து நின்றேன்(14) பணநாதன் அருளில்லாக் கார ணத்தால் பறவைகளாய்ப் பறந்தோடி விட்டார்; மேலும் கணமாக வந்தென்னை எறும்பு போலக் கடித்தார்கள்; கலப்புமணம் பழித்து ரைத்தார்;
*அஞ்சல் - அஞ்சாதே |