2. ஆடவர் எண்சீர் விருத்தம் காதலிக்கும் ஆடவனை இரவுப் போதில் காண்பதற்கு மறைந்திருந்து வரவு பார்க்கும் காதலியைப் போலமுழு நிலவுப் பெண்ணாள் கருமேகத் திரைமறைந்து முகத்தைக் காட்ட, ஏதமிலாத் தமிழொலிபோல் தென்றல் மெல்ல என்னுடலை வருட, உயர் மாடந் தன்னில் *போதனைய பஞ்சணையில் சாய்ந்து பாடல் புனைந்திடநான் ஆடவரை நினைந்தி ருந்தேன்(1) கலக்கமிலா உயர்நட்பு, பிறனில் வேண்டாக் கண்ணியம், ஓர் உடன்வயிற்றுப் பிறந்தோர் தம்முள் விலக்கமிலா துறுதுணையாய் நிற்றல், ஆள்வோர் வினைபிழைத்தால் இடித்துரைத்தல், பகைவர் **நாப்பண் செலக்கருதின் அஞ்சாமல் பேசும் வன்மை, செஞ்சோற்றுக் கடன்கழித்தல் முதலாம் ஆண்மை இலக்கணத்தைக் கடவாதார் இருக்கும் நாடே எழில்நாடாம்; கடப்பவர்கள் இருப்பின் காடாம்(2)
*போது அனைய - மலர் போன்ற மெல்லிய **நாப்பண் - நடுவில் |