பக்கம் எண் :

கவியரங்கில் முடியரசன் 111

உரிமை அஞ்சாது

நாடுமொழி இனங்காக்கத் தொடுக்கும் போரில்
    நல்லுரிமை வேட்கையினைத் தடுப்ப தற்குக்

கூடுசிறைக் கம்பிக்கும் வலிமை யில்லை;
    கொட்டுகின்ற குருதியினைக் கண்ட போதும்,

நாடுகிற பதவிதனை யிழந்த போதும்,
    நடுக்குறுத்தும் கொடுவறுமை வந்த போதும்,

கேடுபல தொடர்ந்தாலும், தூக்கு மேடை
    கிடைத்தாலும் அஞ்சாதிவ் வுரிமை வேட்கை(3)

காந்தியார்

கட்டிவந்த பொருள்விற்க ஆங்கி லத்தார்
    கடல்கடந்து நுழைந்திங்கு நம்மை நாமே

முட்டவிட்டுத் தந்திரமாக் கவர்ந்து நாட்டின்
    முழுவுரிமை கைக்கொண்டார்; அடிமை யாகிக்

கெட்டிருக்கும் மாந்தரிலே காந்தி தோன்றிக்
    கிளர்ந்தெழுந்தார்; அயலவர்கள் நாட்டை ஆள

விட்டிருந்த நிலைபோதும் எனக்க னன்று
    வீரப்போர் தொடுத்ததுமேன்? உரிமை வேட்கை(4)

வ. உ. சி.

முத்திருக்கும் தண்கடலில் முத்தெ டுத்து,
    முகில்முட்டும் மலையகத்துச் சந்த னத்தின்

எத்திசையும் மணக்கின்ற மரமெ டுத்து,
    மிளகெடுத்து, மயில்தோகை இறகெ டுத்துப்

பத்திபத்தி யாய்க்கலங்கள் விற்கச் சென்ற
    பழங்கடலிற் சிதம்பரனார் கப்பல் ஓட்டி

எத்துயர்க்கும் அஞ்சாமற் செக்கி ழுத்தும்
    ஏன்சிறையில் வாடினார்கள்? உரிமை வேட்கை(5)