பக்கம் எண் :

112கவியரசர் முடியரசன் படைப்புகள் - 3

பெரியாரும் அறிஞரும்

நமக்கென்று நாடுண்டு; மொழியும் உண்டு;
    நாகரிகத் தொன்மைமிகும் இனமும் உண்டு;

சுமக்கின்ற அடிமைமனம் போதும் போதும்;
    சுரண்டுகின்ற வடவரொடு தொடர்பு போதும்;

எமக்கென்று தனியாட்சித் திருநா டிங்கே
    எழுப்பிடுவோம் எனக்கிளர்ந்து போர்தொ டுத்துத்

தமக்குநிகர் பெரியாரும் அறிஞர் தாமும்
    தனிமுழக்கம் புரிவதுமேன்? உரிமை வேட்கை(6)

உயர்தனிச்செம் மொழிவழங்கும் தமிழர் நாட்டில்
    உரமில்லா வளமில்லா வரம்பும் இல்லா

அயல்மொழிகள் நுழைந்துவரும் கொடுமை கண்ட
    அறிஞர்குழாம் புலவர்குழாம் வெகுண்டெ ழுந்து

மயலொழிக்கப் புறப்படுதல் உரிமை வேட்கை;
    மண்ணெண்ணெய்த் துணைகொண்டு பிறமொ ழிக்கு

நயமுடனே வரவுரைத்தல் அடிமை வேட்கை;*
    நமதுதமிழ் வாழ்த்திடுதல் அறிவு வேட்கை;(7)

உரிமை எது?

தெருவழியில் நடந்துசெல உரிமை யுண்டு;
    தெருநடுவிற் போவதுமோர் உரிமை யாமோ?

பெருவழியில் ஊர்திக்கும் உரிமை யுண்டு
    பேணாமல் நடப்பவர்க்குத் தீமை யுண்டு;

வருபவரைக் காணுரிமை கண்ணுக் குண்டு
    வழிதவறி முறைகெட்டு மாதர் தம்பால்

கருவிழியைச் செலுத்துகிற கயமை நோக்கம்
    கண்ணுக்கு வேண்டியநல் லுரிமை யன்று(8)


*அடிமை வேட்கை - பொது நிலையங்களிலிருந்த இந்தி எழுத்துகளைத் தார் கொண்டழித்த பொழுது மண்ணெண்ணெய் வைத்துத் தாரை அழித்தனர் சிலர். அதைக் குறிக்கிறது