பக்கம் எண் :

கவியரங்கில் முடியரசன் 113

தன்னுரிமை வேண்டுமென நினைவோ ரெல்லாம்,
    தம்மைப்போல் மற்றவரும் விழைவ ரென்று

மன்னுயிரின் உரிமைஎலாம் மதித்தல் வேண்டும்;
    மானமுடன் தன்னுரிமை போற்ற லாலே

பன்னரிய பொதுவுரிமைக் கிடுக்கண் செய்தல்
    பகுத்தறிவுக் கொவ்வாத உரிமை யாகும்;

சின்னஒரு புழுவேனும் உரிமை காக்கச்
    சீறுவதை நம்கண்ணால் காணு கின்றோம்(9)

பெண்ணுரிமை

தற்காத்துத் தற்கொண்டான் தன்னைப் பேணித்
    தகைசான்ற சொற்காத்துச் சோர்வ கற்றிக்

கற்கின்ற நூல்கற்றுக் கணவன் நெஞ்சக்
    கருத்துணர்ந்து கனிகின்ற அன்பு காட்டி

இற்காத்தல் மாதர்தமக் குரிமை யாகும்;
    இகழ்வாகப் பிறர்பேச ஊரைச் சுற்றிப்

பற்காட்டி உடல்மினுக்கிப் பண்பு கெட்டுப்
    பகட்டுவதைப் பெண்ணுரிமை என்று சொல்லார்(10)

மாணவரும் தொண்டரும்

கற்கின்ற மாணவர்க்கும் உரிமையுண்டு
    கடமைகளும் உண்டென்று கருதல் வேண்டும்;

கற்பிக்கும் ஆசானை மதிக்க வேண்டும்
    கல்வியினில் கருத்தூன்றிப் படித்தல் வேண்டும்;

முற்போக்குக் கட்சிகளில் தொண்டர் கட்கும்
    முழுவுரிமை உண்டெனினும் தலைவன் சொல்லில்

நிற்கின்ற நிலைவேண்டும்; உரிமை வேட்டோர்
    கடமையையும் நெஞ்சிருத்தின் நாடு நன்றாம்(11)