116 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 3 |
பேச்சுரிமை அன்றிருந்த அரசரிடம் குறைகள் காணின் அருகிருந்து வற்புறுத்தி அறமு ரைத்தார் நன்றுடைய தமிழ்ப்புலவர்; வரிகு றைக்க நயவுரைகள் புகன்றிருந்தார்; அரசு மன்றில் சென்றிருந்து வழக்குரைத்தாள் கற்பின் செல்வி; செந்தமிழின் முன்னூல்கள் செப்பும் உண்மை ஒன்றுண்டு; முடியரசன் ஆட்சி தன்னில் உரிமையெலாம் இருந்ததென உணரு கின்றோம்(18) அரசியலில் குறைகாணின் இடித்து ரைக்கும் அவ்வுரிமை அனைவர்க்கும் வேண்டும் இன்று; முறைசெய்வோர் அவ்வுரிமை பறிப்ப தற்கு முனைவதுவும் நன்றன்று, செவிகொ டுத்துப் பரிவுடனே ஏற்பதிலோர் நன்மை யுண்டு, பாராளும் முறைமையது; வேண்டு மென்றே நரிபடைத்த குணமுடையார் குறைகள் சொல்லி நால்வருண முறைபுகுத்தல் உரிமை யன்று(19) பேச்சுரிமை உண்டென்று சங்கம் ஏறிப் பித்தரைப்போல் மனம்போன போக்கில் எல்லாம் தீச்சொல்லை வழங்குவதும் உரிமை யன்று; தெளிவான கருத்தொன்றே கூறல் வேண்டும்; மூச்சுக்கு முந்நூறு வசவு சொல்லி முறைகெட்டுப் பேசுவதும் உரிமை யாமோ? ஏச்சாலே என்னபயன்? எதிரி யுள்ளம் ஏற்கும்வகை பேசுதலே உரிமை யாகும்(20) சிந்தனையை எண்ணத்தை அடிமை யாக்கிச் செயற்படினோர் நலமில்லை; அறிவு கொண்டு சிந்திக்க முனைவதுவும் சிந்தித் தாய்ந்த சீர்மைகளைப் பேசுவதும் உரிமை யாகும்; |