பக்கம் எண் :

கவியரங்கில் முடியரசன் 123

அம்பிருக்கும் வில்லாகி ஆரிருளை ஓட்டுகின்ற
செம்பொனிள ஞாயிறெனச் செக்கச் சிவந்துநின்றான்;

நின்றானை நோக்கி நிலையெல்லாம் பேசுகநீ
என்றேனை நோக்கி ‘இளையவனே! என்தம்பி!

உன்னுளத்தே நின்றிங்கே ஊதுகின்றேன் வெண்சங்கம்
முன்னெழுந்து போர்தொடுக்க முற்படுநீ! ஒன்றுரைப்பேன்’

என்றூதும் சங்கொலியை என்னால் இயன்றவரை
நின்றூது கின்றேன் நிமிர்ந்து

எண்சீர் விருத்தம்

சங்கு முழங்கியது

“நாமிருக்கும் நாட்டிற்குத் தமிழ்நா டென்று
    நாமமிட முறையிட்டோம்; ஆள்வோர் பட்டை

நாமமிட்டார் நம்முகத்தில்; மாற்றுக் கட்சி
    நல்லறிஞர் உரைத்தமையால் மறுத்தோம் என்றார்;

தீமனமா? ஆணவமா? ஆட்சி தந்த
    செருக்குரையா? அடிமைமனப் போக்கா? இல்லை;

நாமமது தமிழரெனத் திரிவோர், நாட்டை
    நற்பெயரால் அழைப்பதற்கு நாணி நின்றார்

என்னாடு தமிழ்நாடென் றியம்பக் கேட்டால்
    என்செவியில் தேன்பாயும் என்று கூறின்

பன்னாடை மதியுடையார் வெறுப்புணர்ச்சி
    பகையுணர்ச்சி என்றெல்லாம் பகட்டு கின்றார்;


பேரறிஞர் அண்ணா எதிர்க்கட்சித் தலைவராக இருந்த பொழுது தமிழ் நாடெனப் பெயர் சூட்ட வேண்டினார். ‘நீங்கள் கூறுவதால் பெயர் மாற்ற மாட்டோம்’ என்றார் ஓரமைச்சர்.