பக்கம் எண் :

கவியரங்கில் முடியரசன் 125

தொலைவிலிருந் திங்குவந்த சாமி யுண்டு;
    தொழுகின்ற அத்தனைக்கும் சமயம் உண்டு;

நிலையான தமிழ்ச்சமயம் எதுதான் என்று
    நிலைநாட்டி வழிகாட்ட முயலக் காணேன்

பித்தாகிப் போனநும்பால் மானம் உண்டா?
    பெருமிதஞ்சேர் வீரமுண்டா? தமிழர் வாழ்வில்

செத்தாலும் பிறந்தாலும் மணம்செய் தாலும்
    செந்தமிழின் ஒலியுண்டா? பிள்ளை கட்கு

நத்துதமிழ்ப் பேருண்டா? பேச்சில், பாட்டில்,
    நயந்தெடுக்கும் வழிபாட்டில், உமது வாழ்வில்

எத்துறையும் தமிழில்லை! தமிழன் என்ற
    இனமொன்றும் உளதென்று சொலவும் வெட்கம்!

நண்போடு வரவேற்றீர் வந்த வந்த
    நாட்டவரை; உமைமறந்தீர்! அவரைக் கூடிக்

கண்மூடிக் கிடந்துழன்றீர்! பண்பி ழந்தீர்!
    கண்டகண்ட கோட்பாட்டைத் தழுவி நின்றீர்!

பண்பாட்டை முதன்முதலில் உலகுக் கோதிப்
    பாங்குயர்ந்த நிலைமறந்தீர்! உணர்ச்சி யற்றுக்

*கண்பாடு கொண்டிங்கே கவலை யற்றுக்
    கிடக்கின்றீர்! கண்விழித்துக் காண்ப தென்றோ?

இன்றெழுந்து தமிழ்காப்பீர்! ஒருமைப் பாட்டை
    ஏனிழந்தீர்? ஆனாலும் வீரம் எங்கே?

குன்றெடுத்த தோளெங்கே? மானம் எங்கே?
    குறைந்ததுவோ? நான்பிறந்த மண்ணின் பக்கம்


கண்பாடு - உறக்கம்