1.பாட்டுப் பறவைகள் கலிவெண்பா முன்னைப் புலவரெலாம் முன்னின்று பாடல்சொல அன்னைத் திருநாட்டை ஆண்டார் தமிழ்வேந்தர்; பார்தாங்கும் மூவேந்தர் பண்டை முடியரசர் பேர்தாங்குங் காரணத்தாற் பேரறிவுச் சான்றோர்கள், பாடுங் கவியரங்கிற் பாட்டுத் தலைவனெனக் கூடும் படிவைத்தார் கொல்லோ அறியகிலேன்; பாடி மகிழ்வித்த பாட்டுப் பறவைகளைப் பாடி மகிழ்விக்கப் பன்னிருவர் வந்துள்ளார்; பாட்டரங்கில் என்னையுமோர் பங்குகொளச் செய்திடுமா நாட்டவர்க்கென் நன்றி நவில்கின்றேன் கைகுவித்தே;10 காலத்தை வென்றவளே, கற்பனைக்கும் எட்டாமல் ஞாலத்தில் நின்றொளிரும் நந்தா மணிவிளக்கே, நெஞ்சத் திருக்கோவில் நின்றிருந் தெந்நாளும் அஞ்சலெனச் சொல்லி அரவணைக்குந் தெய்வதமே, நெஞ்சை அகலாக்கி நீங்காத அன்பென்னும் பஞ்சைத் திரியாக்கிப் பற்றும் உணர்வை எரியாக்கி ஏற்றும் எழில்விளக்கே, முன்னைப் பெரியார்க்குந் தோன்றாப் பெருமை படைத்தவளே, சங்கத்தார் நெஞ்சமெனுந் தண்பொழிலிற் கூடிமனம் பொங்கத்தான் ஆடிவரும் புள்ளி எழில்மயிலே,20 |