பக்கம் எண் :

134கவியரசர் முடியரசன் படைப்புகள் - 3

பாவாணர் நாவிற் பழகிப் பழகிநின்று
கூவாமற் கூவிக் குளிர்விக்கும் பூங்குயிலே,
அப்பாலும் இப்பாலும் ஆடித் திரியாமல்
தப்பேதுஞ் செய்யாமல் தக்க நெறிநடக்க
எப்போதும் நன்றுரைத் தெம்மைப் புரப்பதற்கு
முப்பாலைத் தந்து முறைப்படுத்தும் நற்றாயே,
மோதும் பகைதவிர்க்க மொய்ம்புடனே சென்றங்குத்
தூதுசொலி மீண்ட துணிவுடைய பாட்டரசி
அவ்வைப் பெருமாட்டி ஆண்டாண்டு வாழ்ந்திடவே
செய்வித்த பேராற்றல் சேரும் செழுங்கனியே,30

கற்புக் கடம்பூண்ட கண்ணகியாம் பெண்மகளைப்
பொற்புடைய தெய்வமெனப் போற்றி வணங்குதற்குக்
கற்கோவில் அன்றெடுத்த நற்கோவின் பின்வந்த
சொற்கோவின் காப்பியத்துள் தோன்றிவரும் யாழிசையே,
சாலறிவன் வாணிகத்தான் சாத்தன்மணி மேகலையாம்
நூலதன்பால் இட்டுவைத்த நுண்புலமை வைப்புமுதல்
வற்றாது மேலும் வளஞ்சுரந்து கூடிவர
அற்றைநாள் கண்ட அமுத சுரபியே,
தேவன் திருத்தக்கன் செம்மையுறச் செய்தளித்த
பாவல்ல சிந்தா மணியிற் படரொளியே,40
வன்பில் திணிக்காமல் வந்த வடமொழியைத்
தென்பாகக் கற்றுணர்ந்து தேர்ந்த ஒருகம்பன்
நாவிரித்த பாட்டில் நடம்பயின்று வந்தெங்கள்
காவிரித்தாய் வெள்ளம்போற் காணுங் கவிநலமே,
பூவேந்திப் பொங்கிப் பொழிகின்ற தேனெடுத்து
நாவேந்தத் தந்தசுவை நன்றன் றெனவுரைக்கப்
பாவேந்துஞ் சொற்சுவையாப் பாடியவெண் பாவேந்தன்
பூவேந்தத் தந்த புகழேந்தி வந்தவளே,