பக்கம் எண் :

136கவியரசர் முடியரசன் படைப்புகள் - 3

கேடு தொலைந்ததெனக் கீழ்வான் சிவந்ததென
நாடு சிறந்ததென நாளும்நீ பாடடா;
வானிற் பறந்துவந்து வட்டமிட்டுப் பாருலகை
மேனின்று பாரடா மேன்மைஎலாம் பாடடா;80
சிம்புட் பறவைஎனச் செப்பினான் உன்முன்னோன்
தெம்புளத்தே கொண்டு சிறகை விரித்தெழுவாய்,
வாபறந்து வானில் வலமாச் சுழன்றுதிரி
நீபறந்து வந்தால் நிலமெல்லாங் கண்டிடுவாய்’;
என்றமொழி கேட்டேன்நான் எப்படி வான்பறப்பேன்
என்றயர்ந்தேன்; அஃதுணர்ந்த என்னன்னை மூரலித்துச்
‘செல்வ மகனே சிறகிருந்தும் நீயறியாய்
சொல்வ துடையேன் சொலுமுன்னே மேலெழுவாய்,
உள்ளத்தே வற்றாமல் ஊறிவரும் பேருணர்ச்சி
வெள்ளத்தை ஓர்பால் விரிசிறகாக் கொண்டிடுக,90
கற்ற இலக்கணத்திற் கண்ட திறமெல்லாம்
மற்றோர் சிறகா மதித்துணர்ந்து கொண்டெழுக;
கற்பனையாம் வானிற் கடுகிப் பறந்துவிடு,
அற்புடைய பூமிக்கும் அப்பாலே வந்துவிடு,
பாடும் பறவையடா பாடி மகிழ்ந்திடடா,
வாடும் நிலைஎதற்கு வாவா விரைந்’தென்றாள்;
கண்ணை யிமைக்குமுன் கற்பனையில் ஏறிவிட்டேன்
மண்ணை மறந்தேன் மகிழ்ச்சிக்கோர் எல்லையிலை;
விண்ணிற் பறந்தேன் விழையுந் திசைஎல்லாம்
நண்ணித் திரிந்தேன் நற்றாய் உடன்வந்தாள்;100
ஆங்கிருந்து பார்த்தேன் அடடாஓ மண்பரப்பில்
தேங்கியுள காட்சியெலாஞ் செப்புந் திறனில்லை;
நெஞ்சங் குளிர்ந்து நெடுவானில் அங்குமிங்கும்
விஞ்சுங் களிப்பால் விளையாடி நான்பறந்தேன்;
பாடிப் பறந்தேன் பசுமை வளமெல்லாம்
கூடிக் கிடக்கின்ற கோலமெலாங் கண்டுணர்ந்தேன்;