காட்சிஎலாங் கண்டு களிகூர நான்பறந்தேன்; மாட்சிமைசேர் என்னன்னை மற்றுஞ் சிலசொன்னாள்: ‘நாட்டு வளமெல்லாம் நாடிச் சிறகடித்துப் பாட்டுப் பறவைஎனப் பண்பாடி வந்தனைநீ,110 எண்ணி லடங்கா இயற்கை வளங்களெலாம் மண்ணில் இருந்தும் மனிதன் நிலைமட்டும் வற்றி வறண்டு வறுமை மிகவுற்றுச் சுற்றி யலைகின்றான் சோற்றுக் கழுகின்றான் ஏனென் றறிந்தாயா?’ என்று வினவினள்தாய்; நானொன் றறியேன் நவிலெனக்கு நீ யென்றேன்; கையிருந்தும் காலிருந்தும் காடு கழனியெனச் செய்யிருந்தும் வேலையது செய்ய மனமின்றிச் சோம்பித் திரிகின்றான்; சோற்றுக் கவலையினால் தேம்பித் தவிக்கின்றான்; தீங்கின்றி வாழ120 உழைப்பை மதிப்பதில்லை ஓய்ந்திருந்தே இங்குப் பிழைக்க விழைகின்றான் பேதைமையாற் சாகின்றான்; மண்ணிற் கிடந்து மடிகின்ற மாந்தனை நீ நண்ணி உணர்வூட்டு, நாளும் வலிவூட்டு, கண்ணைத் திறந்துவிடு, காலத்தை ஞாலத்தை எண்ணித் தொழில்புரிய ஏவிவிடு, மண்ணகத்தே வாழ்வாங்கு வாழ வழிமுறைகள் சொல்லிவிடு; தாழ்வாகி நிற்போர் தலைநிமிரச் செய்துவிடு; பாடும் பறவையெனப் பாடி வருபவனே கூடும் உனக்கொன்று கூறுகிறேன் நெஞ்சிற்கொள்;130 மண்ணை விடுத்தெழுந்து மாந்தன் உடல்தவிர்த்து வண்ணப் பருந்தேபோல் வானிற் பறந்தாலும் செத்துக் கிடக்குஞ் சிறப்பில் இழியுணவை நத்திப் பறந்திறங்கும் நாட்டத்தை விட்டுவிடு, சொன்னதையே சொல்லுங் கிளிப்பிள்ளை யாகாமல் உன்னதையே சொல்லி உயரப் பறந்துதிரி; மாட்டின் முதுகிருந்து மாறாது கொத்திமிக |