பக்கம் எண் :

144கவியரசர் முடியரசன் படைப்புகள் - 3

காளை வடிவாய கல்லருகில் செல்வோர்கள்
தோளெல்லாம் பூரிப்பர்; தொன்மைத் தமிழ்மாந்தர்
சிற்பக் கலைத்துறையில் சேர்த்துவைத்த சீர்த்தியெலாம்
கற்பனையில் தேக்கிக் களிப்பார்கள் உண்மையிது;

கட்டடக்கலை

வான முகட்டு வழிஏற வைத்தஒரு
ஏணி எனத்தோன்றும் எண்ணில்லாக் கோபுரங்கள்,
மாடங்கள், மாளிகைகள், மாற்றுயர்ந்த பொன்வேய்ந்த
கூடங்கள், கொற்றவர்கள் கூடும் அரண்மனைகள்,
போர்யானைக் கூட்டம் புகுந்துவரும் நேர்வாயில்
போர்கருதி யாரும் புகமுடியாச் சீர்வாயில்,30
மாற்றார் கடந்தறியா மாமதில்கள் இத்தனையும்
சாற்றாவோ கட்டடத்து நுண்கலைக்குச் சான்றாக;
விஞ்சும் எழிலால் வியப்பூட்டும் கோபுரத்தைத்
தஞ்சைப் பெரும்பதியில் தந்தமன்னன் சாய்ந்துவிட்டான்
ஆக்கிப் படைத்தானே அன்னவனும் சாய்ந்துவிட்டான்;
தேக்குபுகழ் மட்டும் தினையளவும் சாயவில்லை;
கோபுரத்தில் காணும் கொடுமுடியின் தன்னிழலும்
ஓர்புறமும் சாயவில்லை; ஒப்பில்லை இக்கலைக்கே;

இசைக்கலை

நெஞ்சைக் கனிவித்து நெக்குருகச் செய்விக்கும்
விஞ்சைக் கலையாகும் விந்தை இசைக்கலையில்40
ஒப்புயர் வில்லாமல் ஓங்குநிலை பெற்றிருந்தோம்
செப்புகின்ற சான்றுகளோ எப்பொழுதும் ஈங்குண்டு;
காட்டில்வளர் மூங்கிலிடைக் கார்வண்டு போய்த்துளைத்த
தோட்டில் நுழைகாற்றுத் தோற்றுவித்த நல்லிசையைக்
கேட்டான் மனங்களித்தான்; நாடோறும் கேட்பதற்கு