வேட்டான், எடுத்தான் *வெதிரைத் துளைத்தான் குழல்கண்டான்; வாயைக் குவித்திசையை ஊதிப் பழகி இனிதாக்கிப் பாருக் களித்தவன்யார்? வேட்டைக் குதவிவரும் வில்லெடுத்து நாண்தொடுத்துப் பூட்டித் தெறித்தான் புதிய ஒலிகேட்டான்;50 விண்ண் ணெனஇசைத்த ஓசை வியப்பூட்டப் பண்ண் ணிசைக்கும்யாழ் பண்ணி நமக்களித்தான்; வேட்டை யளித்த விலங்கினத்தின் தோலுரித்து மேட்டில் உயர்மரத்தில் வீசி எறிந்துவிட்டான்; காய்ந்தெழுந்த தோலிடத்துக் காற்றால் சிறுகொம்பு தோய்ந்துதோய்ந் தாடுவதால் தோன்றியதோர் பேரோசை அன்றே படைத்தான் அளப்பரிய தோற்கருவி; நன்றாம் இசைக்கருவி நாலுவகை செய்தமைத்தான்; கூவும் குயில்கண்டான் கொக்கரித்துக் கூவிநின்றான் யாவும் இசையாகப் பாயும் நிலையுணர்ந்தான்;60 பந்தென்றும் கும்மியென்றும் பாய்ந்தாடும் ஊசலென்றும் வந்த விளையாட்டில் மங்கையர்கள் பாடிடுவர்; ஏற்றம் இறைப்பார் இசைக்கின்ற பாட்டோசை; நாற்று நடுவோர்கள் நாவசைக்கும் கூட்டோசை, கொல்லைத் தினையிடிக்கும் கோல்வளையார் பாடுகின்ற *வள்ளைப்பாட் டெல்லாம் வளரிசையைக் காட்டாவோ? சீராரும் தன்மகவைச் சின்னஒரு தொட்டிலிலிட் டாராரோ பாடுகின்ற அப்பாட்டுப் போதாதோ? ஒப்பாரிப் பாட்டுக்கோர் ஒப்புண்டோ? அஃதேபோல் எப்பாரில் கண்டீர்கள்? ஈடில்லாக் கற்பனையாம்;70
*வெதிர் - மூங்கில். **வள்ளைப்பாட்டு - உலக்கைப் பாட்டு. |