பக்கம் எண் :

146கவியரசர் முடியரசன் படைப்புகள் - 3

நடனக்கலை

பாடற் கலைசொன்னோம்; பாடல் துணையாக
ஆடற் கலையும் அறிந்தவனே நம்முன்னோன்;
விண்ணில் தவழ்ந்து விளையாடும் கார்முகிலைக்
கண்ணெதிரில் கண்டு களித்தெழுந்த வண்ணமயில்
தோகை தனைவிரித்துத் துள்ளிவிளை யாடுகையில்
ஓகை மிகவாக உள்ளந்தான் துள்ளியதால்
அன்றுமுதல் ஆடுகிறான் ஆடுகிறான் அம்பலத்தே
நின்றுநடம் ஆடுகிறான் நேரில்லாக் கூத்தே;
குரவை துணங்கை கொடுகொட்டி என்று
பரவிவர நாளும் பலவகையில் கண்டுநின்றான்;80

கூத்தன் விறலி குறிக்கும் பொருளென்ன?
வேத்தியலும் மக்கள் விரும்பும் பொதுவியலும்
சொல்லும் பொருளென்ன? சொல்லுதலும் வேண்டுவதோ?
கல்லுந்தான் சொல்லாதோ ஆடற் கலைத்திறனை?
மாதவித்தாய் ஆடும் மரபெல்லாம் கண்டபினும்
ஏன்தவித்தாய்? நல்ல எழிற்கலைகள் கண்டவன் நீ!

ஓவியக்கலை

வீட்டுச் சுவரில் விளங்குமேற் கூரைதனில்
காட்டும் திறமெல்லாம் காட்டித் திரைதன்னில்
ஊட்டும் பலவண்ணம் ஊட்டி உயிரோவம்
தீட்டும் திறலோனைத் தேர்ந்தெடுத்தே அன்னவனைக்90
*கண்ணுள் வினைஞனெனக் கட்டுரைத்தே ஓவியத்துச்
செந்நூல் படைத்துச் செழிப்படையச் செய்தவர் நாம்;


*கண்ணுள் வினைஞன் - ஓவியம் வல்லான்.