பக்கம் எண் :

தமிழ் முழக்கம்149

இடமேதும் இல்லைஎனச் சொல்லும் வண்ணம்
    இரவெழுந்து படையெடுத்துச் சூழ்ந்து நிற்க,
உடுவாகக் கண்ணீரைத் துளித்துக் கொட்டி
    உயர்வானில் நிலவணங்கு தனித்து நின்றாள்.3

புறமெல்லாம் அவலத்தின் குறிகள் காட்டப்
    பொன்னிறத்த மனையகத்துப் புகுந்து சென்றேன்;
நிறமெல்லாம் ஒளிகுறைந்து, பிரிவுத் துன்பம்
    நெஞ்சமெலாம் மிகநிறைந்து, புவியி லுள்ள
துறவெல்லாம் சேர்ந்ததுபோல் நலம்து றந்து,
    துணைவிழிகள் நீர்துறந்து, துயில்து றந்து-அவ்
விரவெல்லாந் தவஞ்செய்யுங் கற்புத் தெய்வம்
    இன்னலுக்கோர் வடிவுதந்து விளங்கக் கண்டேன்.4

அடிமலருங் கொடியிடையும் வறிதே யாக
    அணிசிலம்பும் மேகலையும் பேழை வைகும்;
நெடிதுயிர்ப்ப மங்கலநாண் அணிந்த தன்றி
    நேரிழைகள் அத்துணையுந் துறந்த மேனி
கொடியெழுத மறந்துவிட்ட தோளில் வண்ணக்
    குங்குமத்தின் சுவடில்லை பொலிவும் இல்லை;
வடிபுனலால் விழிமுழுதும் சிவந்த தன்றி
     வண்ணவிழி மையெழுதிக் கருக்க வில்லை.5

கரும்புருவச் சிலைநுதலின் திலக மெங்கே?
    காதமர்ந்து தோள்வருடும் குழைகள் எங்கே?
அரும்புமிள நகைஎங்கே? கொவ்வை தோற்கும்
    அவ்விதழின் நிறமெங்கே? எழிலும் எங்கே?
சுரும்புமுரல் கடிமலர்ப்பூங் கொத்தும் எங்கே?
    குழற்பூசும் நறுநெய்தான் எங்கே எங்கே?
இரும்புமனம் குழைவிக்கும் துயரந் தாங்கி
    இருக்கின்ற மாமணியை அங்குக் கண்டேன்.6