பக்கம் எண் :

தமிழ் முழக்கம்151

“நெற்றிக்குப் பிறைநிகராம்; வேலி ரண்டு
    நீள்விழிக்குச் சரிநிகராம்; விழியின் மேல்பால்
உற்றிருக்கும் கரும்புருவம் கரும்பு வில்லாம்;
    ஒளிமல்கும் வச்சிரத்தின் நடுப்பா கந்தான்
சிற்றிடைக்கு நிகராகும்; இயல்பான் வந்த
    சீரிளமைப் பேரழகை மாதர் கூடி
*எற்றுக்குச் செயற்கையினாற் கோலஞ் செய்தார்?
    எதைஎதையோ சுமையாகப் பூட்டு கின்றார்!”11

“கானகத்தே தோகைமயில் சென்று புக்குக்
    கரந்துறையக் காரணமென்? துள்ளும் புள்ளி
மானடுத்த விழியாளின் சாயல் வேண்டி
    மனமுடைந்து படுதோல்வி கண்டே யன்றோ?
மீனடுத்த புனல்தொடுத்த வயல்வ ரப்பில்
    மெலிந்தொதுங்கி அன்னங்கள் வாழ்வ தென்கொல்?
தேனடுத்த மொழியாளின் நடையைக் கற்கத்
    திணறியதால் தவறியதால் வெட்கி யன்றோ?”12

“மழலைமொழிக் கிள்ளைஎலாம் பிரியா தங்கு
    மங்கையிவள் கையகத்தே நிற்ப தென்கொல்?
குழலிசையும் யாழிசையும் அமிழ்தப் பாகும்
    குழைத்தெடுத்த இவள்குரலைக் கற்க அன்றோ?
அழகுவலம் புரிமுத்தே! கரும்பே! தேனே!
    அருமருந்தே! கதிர்மணியே! பொன்னே! நின்னைச்
சுழல்அலையிற் பிறவாத அமிழ்தம் என்கோ?
    சொல்யாழிற் பிறவாத இசைதான் என்கோ?”13

என்றெல்லாம் கண்ணகியை நலம்பா ராட்டி
    இசைத்தவன்தான் அவள்நலியப் பிரிந்து விட்டான்;
மன்றலன்று வாழ்த்துங்கால் மாதர் கூடி
    மன்னவனைப் பிரியாமல் *கவவுக் கைகள்


*எற்கடி - எற்கு + அடி = ஏனடி *கவவுக் கைகள் - அணைத்த கைகள்.