பக்கம் எண் :

தமிழ் முழக்கம்153

உயிரனைய தேவந்தி என்னுந் தோழி
    உளமுருகிக் கண்ணகிபால் வந்து நின்று,
“செயிரறுநீர்க் குண்டங்கள் இரண்டுள் மூழ்கிச்
    சிந்தையினால் காமனைநாம் வணங்கி நின்றால்
துயரொன்றும் அணுகாமல் இன்பம் மேவித்
    துணையுடனே வாழ்வுவரும்” என்றா ளாக.
“மயலுடையாய், துறைமூழ்கித் தெய்வம் போற்றல்
    மரபன்றே; எங்கட்குக் கணவன் தெய்வம்”.18

எனவுரைத்துத் தமிழகத்து மரபு காத்தும்
    எழும்போதும் கொழுநனையே தொழுது வாழும்
நனவகத்து நிறைமாதர் மானங் காத்தும்
    நாம்வணங்குந் தெய்வமென ஆற்றி நின்றாள்;
தினவகத்தான் மாதவியைப் பிரிந்து, மீண்டு,
    “செல்வமெலாம் இழந்தமையால் நாணு கின்றேன்”
எனவுரைத்தான்; “உளசிலம்பு கொள்க” என்ற
    இன்முகத்தாள் பண்புளத்தை யாண்டுக் காண்போம்? 19

பிரிவாலே துயரடைந்தும், மீண்டு வந்தான்
    பின்சென்று படருழந்தும், கணவற் காக
இருள்வானின் நிலவாக வாழ்ந்து நின்றாய்!
    இன்றுணைவன் கொடுங்கோன்மைக் கிரையாய் மாண்ட
    உரையாலே நின்னுளத்துக் கொழுந்து விட்ட
    ஒளிநெருப்பால் வென்றிகண்டாய்! கொடுங்கோல் சாய்க்க
எரிதானோர் வழியென்றால் என்னு ளத்தும்
    எரிதழலை மூட்டிவிடு தாயே வாழி!20

கண்ணகி விழா

திருச்செங்கோடு

24.5.1964