பக்கம் எண் :

154கவியரசர் முடியரசன் படைப்புகள் - 3

5. புகழ்க்கம்பன்

எண்சீர் விருத்தம்

புகழ்மிகுத்து வாழ்வாரே வாழ்வார் நல்ல
    புகழ்விடுத்தார் வாழாதார் என்றே வாய்மை
புகல்கின்ற முந்தையருள் முதல்வ னான
    பொய்யாத மொழிப்புலவன் சொன்னான்; மேலும்
புகழ்வருமேல் இன்னுயிருங் கொடுத்து நிற்பர்
    புன்மைவரும் எனில்உலகே கிடைக்கு மேனும்
இகழ்ந்ததனைக் கொள்ளார்நற் சான்றோர் என்றே
    இளம்பருவப் பெருவழுதி இயம்பி நின்றான்.1

பிறக்குங்கால் புகழோடு பிறப்பா ருண்டு;
    பிறந்தபினர்த் தம்முழைப்பால் அறிவின் ஆற்றல்
சிறக்குங்கால் புகழடைந்து வாழ்வார் உண்டு;
    செலவழித்து விலைகொடுத்துப் புகழை வாங்கப்
பறக்கும்பேர் சிலருண்டு; வேண்டு மென்றே
    பலர்க்கதனைச் சுமத்துவதும் வழக்கில் உண்டு;
பிறக்குங்கால் புகழோடு பிறந்தான் கம்பன்
    பெருமைக்கே உறைவிடமாய்த் திகழ்ந்து நின்றான்.2

இயலைந்தும் ஐங்குழுவாய் அமர்ந்தி ருக்க,
    எண்சுவைகள் பேராயம் எட்டாய் நிற்க;
மயல்தவிர்ந்த புலமைஎனும் மகுடஞ் சூடி,
    மக்கள் மன அரியணையில் வீற்றி ருந்து,