பக்கம் எண் :

தமிழ் முழக்கம்157

அடுத்திருக்கும் வடமொழியும் எல்லை கண்டான்;
    அம்மொழியைப் படிஎன்றே அவனை யாரும்
தொடுத்திருந்து வற்புறுத்தித் தொலைக்க வில்லை;
    துணைமொழியாய்ப் பயின்றதனிற் புலமை பெற்றான்.9

பலமொழிகள் இவ்வண்ணங் கற்று ணர்ந்த
     பாங்கறிந்து ‘கல்வியினாற் பெரியன் கம்பன்
புலவனிவன்’ என்றெல்லாஞ் சான்றோர் வாயால்
    புகழ்ந்துரைக்கப் பெருவாழ்வு வாழ்ந்தி ருந்தான்;
குலமுனிவன் வன்மீகன் காதை கற்றுக்
    குலவுதமிழ்க் கடவுட்கோர் கோவில் கண்டான்
இலகுபுகழ் பெறவாழ்ந்தான் ஏற்றங் கொண்டான்
    என்றுமுள தென்றமிழ்க்குப் புகழுந் தந்தான்.10

தனக்கொருவர் செய்ந்நன்றி மறவேல் என்ற
    தமிழ்மொழியும் முந்தைவழி; அதனைக் கம்பன்
மனத்திருத்திப் பெரும்புகழுக் குரியன் ஆனான்;
    மதியுடையான் பாட்டுவளம், வெண்ணெய் நல்லூர்
தனக்குரியான் சடையப்பன் மனமு வந்து
    தந்துவந்த சோற்றுவளம் அன்றோ? அந்தப்
பனைத்துணைய நன்றியினை மறவா தென்றும்
    பாட்டகத்தே பாடிவைத்துப் புகழும் பெற்றான்.11

காரைக்குடி

மார்ச்சு, 1965