பக்கம் எண் :

தமிழ் முழக்கம்159

கண்டுயிலும் போழ்தத்துக் காணாமல் காலிடறிக்
கொண்டதன்மேல் வீழுங் குருடன்தான் தப்புவனோ?
தப்பா தழித்துத் தறுகண்மை காட்டிடுவேன்;
இப்பார் எமக்குரிமை யாருக்கும் விட்டுவிடோம்’
என்றுரைத்த வஞ்சினத்தான் எம்முன்னோன்; அவ்வேந்தன்
நின்றுரைத்த வீரத்தை நெஞ்சிற் பதித்துள்ளோம்;
தாய்க்குலத்தின் வீரத்தைச் சற்றே நினைந்துவிடின்
போய்க்களத்தில் இன்றே புகுவோம் எனத்தோன்றும்;
‘ஈன்று புறந்தருதல் எற்குத் தலைக்கடனாம்
ஆன்ற சமர்முருக்கி ஆர்த்த களிறடக்கி30
வென்று திரும்புதலே வீரமிக்க காளையர்க்
கென்றுங் கடனாகும்’ என்றுரைத்தாள் ஓரன்னை;
மாற்றான் படையெடுத்து வந்தான் எனப்புகன்ற
மாற்றம் செவிபுகுத மானத்தான் ஓரிளைஞன்
வேலெடுத்தான் போர்தொடுத்தான் வீரச் சமர்க்களத்தில்
காலொடித்தான் கையொடித்தான் கண்ணிமைக்கும் நேரத்தில்
சாகடித்தான் பற்பலரைச் சாகாரை நாற்புறமும்
போகடித்தான் ஆனாலும் தன்னுயிரைப் போக்கடித்தான்;
‘வீரக் குலமகன்தான் வேலேந்திப் போனானே
நேரிற் பொருதானோ? நேராரை வென்றானோ?’40
என்றவன்தாய் கேட்டாள்; இழிமகனாம் ஓர்பேதை
‘துன்றமரில் *வெந்காட்டித் தோற்று மடிந்தா’னென்
றோர்பழியைக் கூறிவிட்டான்; ‘ஓடியவன் என்மகனா?
ஊர்பழிக்கச் செய்தனனா? ஒன்னார்க்குத் தோற்றோடும்
பாவி மகனுக்கோ பால்கொடுத்தேன்’ என்றவன் தாய்
ஆவி துடித்தாள் அலறிப் புலம்பியவள்
போர்க்களத்தை நோக்கிப் புறப்பட்டாள் வாளெடுத்து;


*வெந் - முதுகு