பக்கம் எண் :

தமிழ் முழக்கம்161

கொள்ளை யடிக்கக் கொடுத்துவிட்டோம் நம்நாட்டை;
செல்வம் பறிபோகச் சீரிழந்து நாடிழந்
தல்லும் பகலும் அடிமைகளாய் நொந்துழன்றோம்;
குற்றம் புரிந்திங்குக் கோலேந்தும் மாற்றாரைச்
செற்றம் மிகக்கொண்டு சீறிப் பகைத்தெழுந்தோம்;80
ஆண்ட கொடுங்கோலர் ஆணவத்தாற் செய்தவெலாம்
மீண்டும் நினைத்துவிடின் மெய்சிலிர்க்கும் கண்சிவக்கும்;
வாட்டுஞ் சிறையெனினும் வாட்டம் அடையவிலை,
வேட்டு, துளைத்தாலும் வீரம் அடங்கவிலை,
நாட்டை நினைந்ததனால் நம்முரிமை வேட்டதனால்
வீட்டை மறந்தோம் விடுதலைக்கே பாடுபட்டோம்;
அந்நாளில் நம்மவர்கள் ஆற்றிய நற்றொண்டால்
இந்நாள் உரிமையினை ஏற்று மகிழ்கின்றோம்;
அஞ்சாமல் துஞ்சாமல் ஆர்த்தெழுந்த போர்வீரம்
எஞ்சாமல் நின்றிருக்க இன்றதனைப் பாடுவம்நாம்;90
செந்தமிழை நம்முயிரைச் சீர்கொண்ட தாய்மொழியை
எந்தமொழி தன்னாலும் ஏங்க விடுவதில்லை
ஆட்சி மொழியுரிமை அன்னை மொழிக்கானால்
மாட்சி நமக்காகும் என்றெழுந்த மாணவரைச்
சுட்டழித்த போதும் துளங்காமல் நின்றிருந்து
கட்டிளமைக் காளையர்கள் காட்டியநல் வீரத்தைப்
பாடாமல் விட்டுவிடப் பாவலரால் ஒல்லுவதோ?
பாடாமல் நாவெதற்குப் பாவெதற்குப் பாடுவம்நாம்;
மேன்மைத் தமிழ்காக்க மேலெல்லாந் தீயூட்டி
ஆண்மைத் திறமுரைத்த ஆடவரைப் பாடுவம் நாம்;100
இவ்வனைய வீரத்தின் ஏற்றத்தைப் பாடுவதால்
செவ்வியநன் னெஞ்சத்தில் சிந்தா உரமேறும்;
சீனத்த ரானாலும் செந்நெறிசெல் லாப்பாகித்