7. நீரின் பெருமை கலிவெண்பா
பூதங்கள் ஐந்தாலும் பூத்ததுதான் இவ்வுலகம் வேதங்கள் மற்றுள்ள விஞ்ஞான நூல்களெலாம் ஓதுகின்ற உண்மையிதே; ஓதுமோர் ஐந்தனுள் தீதகன்ற நானும் திகழ்கின்றேன்; என்னைத்தான் நீரென்று பேர்குறிப்பர் நீணிலத்தார்; பாருக்கு வேரென்று சொல்லி வியந்துரைக்கத் தக்கவன்யான்; நீரின் றமையா துலகமெனக் கூறியபின் வேறென்ன சான்று விளம்புதற் கீங்குளது? பற்பலவாம் நற்பண்பு பாரில் எனைப்போலக் கற்றவரைக் கண்டதிலை; காணுங்கள் என்பண்பை;10 காவிற் செழித்தஒரு கான்முல்லை கொம்பின்றித் தாவிப் படர்தற்குத் தள்ளாடும் வேளைதனில் காரோட்டும் கையுடையான் கண்டுமனம் நைந்துருகித் தேர்காட்டிச் சென்றானோர் தென்னாட்டான் வேள்பாரி; கூடிவருங் கார்முகில்கள் கொட்டும் மழைநனைக்க ஆடிவரும் மாமயிலுக் காடைகொடுத் தான்பேகன்; நாட்டுக் குரியவன்தான் காட்டுக்குச் சென்றாலும் பாட்டுக் குருகிப் பரிசிலெனத் தன்தலையை ஈந்தான் ஒருகுமணன் ஈகைக்கோர் பேரரசன்; வேந்தன் அதியன் விறலிக்கு நெல்லிதந்தான்;20 இவ்வனைய வண்மையினர் ஈரமுள்ள நெஞ்சத்தார்; |