164 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 3 |
அவ்வனைய ஈரந்தான் ஆருக்குச் சொந்தமென்பீர்? எற்கென்று வாய்த்த இயல்பன்றோ? தண்ணளியாம் சொற்களித்த தண்மை எனக்குரிய சொத்தன்றோ? ஊருக்கும் பாருக்கும் ஒத்துழைப்பேன்; சீறிவரும் போருக்கு நானெழுந்தால் போடும் தடையில்லை! கற்பனைஎன் றெண்ணேல் கடவுள் எனத்தகுவேன்; தற்பெருமை யன்றிதற்குச் சான்று பகர்கின்றேன்; என்னருளை வேண்டாதார் இவ்வுலகில் யாருள்ளார்? சொன்ன இருதிணையின் சோர்வுதரும் வேட்கைதனை30 நீக்கி மறைத்தருளும் நீர்மை உடையவன்நான்; காக்குமிக் காரணத்தால் காதல்மீக் கூரஎனை ஆறென் றழைத்திடுவர், ஏரிகுளம் என்றிசைப்பர், ஊறுங் கிணறென்பர், ஓங்கும் அருவிஎன்பர், கொட்டும் மழைஎன்றுங் கோலச் சுனைஎன்றும் சொட்டும் பனிஎன்றும் சூழும் புனலென்றும் பாயுமொரு வெள்ளமெனப் பற்பலவாம் தோற்றத்தில் ஆயிரம்பேர் சொல்லி அழைப்பார்கள்; நீக்கமற எங்கும் நிறைந்திருப்பேன், இல்லா இடமில்லை; பொங்கும் மகிழ்ச்சியினால் பூசிப்பார் முன்னிற்பேன்,40 விண்ணில் இருப்பேன், விளையாடிக் கூத்திடுவேன், மண்ணில் இருப்பேன், மலைமேல் குடியிருப்பேன், கட்புலனா காமல் கரந்திருப்பேன், என்னடியைத் *தொட்டகழும் நல்ல **தொழும்பர்க் கிலக்காவேன்; பேருருவங் கொண்டு பிறங்கித் திகழ்ந்தாலும் சீறுருவம் பெற்றுச் சிலகால் வருவதுண்டு; காட்சி தருமுருவம் காணா அருவுருவம் மாட்சியுறப் பெற்றிருப்பேன், ஆவியாய் வானெழுந்து காற்றிற் கலந்திருப்பேன், கார்முகிலா மாறியருள் ஊற்றிப் பொழிந்துலகோர் உள்ளங் குளிர்விப்பேன்;50
*தொட்டகழ்தல் - தோண்டுதல். **தொழும்பர் - அடியவர். |