பக்கம் எண் :

தமிழ் முழக்கம்165

‘தூணில் இருப்பான் துரும்பிலும் நின்றிருப்பான்
காணும் பொருளில் கடவுள் கலந்திருப்பான்’
என்றுரைப்பர்; ஆய்ந்துணரின் என்னிலையும் அப்படியே;
நன்றினிக்குந் தெங்கின்காய் நான்புகுந்து வாழ்ந்திருப்பேன்;
மாங்கனியில் செங்கரும்பில் மற்றுள்ள தீங்கனியில்
தேங்குசுவைச் சாறாகச் சேர்ந்திருப்பேன்; ஆய்ச்சியர்தம்
மோருக்குள் பாலுக்குள் மூழ்கிக் கலந்திருப்பேன்;
பாருக்குள் யாரறியார்? பற்றுடையோர் தாம்விழைவர்;
செப்புத் தகட்டினால் செய்தபெரும் பானைகளும்
துப்புரவு செய்யாத தோண்டிகளும் பித்தளையின்60
பாண்டமுடன் மட்குடமும் பாழுற்ற வாளிகளும்
வேண்டிக் குழாயடியில் வெய்யிலென்றும் பாராமல்
மாதவங்கள் செய்தங்கு மண்டிக் கிடப்பதெலாம்
பூதலத்தென் தோற்றப் பொலிவைக் கருதியன்றோ?
என்சமயம் நின்சமயம் இஃதே முதன்மையென
வன்சொல் லுரைத்து வழக்கிடுவோர் போல்நின்
றெனதெனது முன்பானை என்றுவழக் கிட்டுத்
தனதுகுடம் தூக்கித் தடுமாறி ஓடிவரும்
பெண்டிர் குழல்பற்றிப் பேசா தனபேசிச்
சண்டை யிடுவதெலாம் தண்ணீராம் என்பொருட்டே;70
ஆக்குந் தொழிலுடையேன் ஆகும் பொருளனைத்தும்
காக்கும் வினையுடையேன் காத்த அவைமுழுதும்
நீக்குந் திறலுடையேன் நீங்கா விளையாட்டிற்
போக்கும் பொழுதில் புரிகின்றேன் முத்தொழிலும்;
முந்நீர்மை செய்திங்கு முப்பொழுதும் வாழ்கின்ற
என்னீர்மை சொன்னேன் இறைவனெனில் ஒவ்வாதோ?
இத்துணைதான் என்பெருமை என்றெண்ணிப் போகாதீர்;
அத்தனையும் சொல்லில் அடங்கா தடங்காது;
‘தாயைப் பிழைத்தாலும் தண்ணீர்க் கொருகுறையும்
தோயப் பிழைக்காதீர்’ தொன்மை மொழியிஃதாம்;80