உள்ளம் மகிழ்விப்பார் உள்ளனரோ? இல்லைஎன்பேன்; கூவிப் பலகூறிக் கொட்டமடித் தென்மடியில் தாவிக் குதித்துமிக தாண்டவங்கள் ஆடிடுவர்;110 தோணிபல செய்து சுதந்திரக் கப்பலினால் வாணிகம் செய்வதுபோல் வட்டமிட்டுத் தாம்மகிழ்வர்; பேசும்பொற் சித்திரமாம் பிள்ளை விழிக்கடையில் வீசுமொளி முத்தாய் விளங்கித் ததும்பிநின்று காவியம் வல்லார்க்கும் ஒவியம் வல்லார்க்கும் பூவியக்குங் கற்பனைகள் பூத்துவரச் செய்திடுவேன்; ஊடிவரும் மெல்லியலார் ஒண்மலர்க் கன்னத்தில் ஓடிவரும் நீராவேன்; ஆடவர் கண்டுவிடின் ஐம்புலனும் ஒன்றாகி, அந்தோ நடுநடுங்கி, வெம்பியுளம் வாட்டமுற, வீரம் நிலைகலங்கப்120 பொற்றொடியர் நெஞ்சங்கள் பூரித்தே எக்களிக்க வெற்றி பெறவே விளையாட் டயர்ந்திடுவேன்; சால்புணர்ந்தோர் கூறும் தகவுரைகள் கேளாது கோல்பிறழ்ந்தார் ஆட்சியில் கூழுக்கும் வக்கில்லார் கூன்விழுந்த மேனி, குழிவிழுந்த கன்னங்கள், ஏன் பிறந்தோம் என்றேங்கும் நெஞ்சம், இவையுடையார் கண்களிலே தேங்கிக் கசிந்து துளியாகி மண்ணிற் கொடுங்கோன்மை மாய்க்கும் படையாவேன்; சோர்வின்றிப் பாடுபட்டும் சோறின்றிப் பாடுபட ஏர்வென்றி கொண்டமகன் ஏங்கித் தவித்திருக்கும்130 மண்குடிலுக் குள்ளே மழைவடிவில் நான்புகுவேன்; புண்படுமா றந்தமகன் பொன்றும் நிலைகண்டு மேற்கூரை ஏறிநான் மெல்ல அழுதிருப்பேன் காற்கூரை எல்லாம் கசிந்துகண் ணீர்வடிப்பேன்; வண்ணமலர்க் காநுழைவேன்; வாய்திறந்த கிண்ணமென எண்ணும் படிவிரிந் தேந்தியுள தாமரையைக் கண்டு மனங்குளிர்வேன்; கண்ணுக் கழகுதரும் |