பக்கம் எண் :

170கவியரசர் முடியரசன் படைப்புகள் - 3

8. பறம்புமலை

எண்சீர் விருத்தம்

பாடிவருஞ் சுரும்பினங்கள் களிக்கும் வண்ணம்
    பைந்தேனைச் சுரந்தூட்டும் குவளைப் பூக்கள்;
ஊடிவரும் மங்கையர்தம் விழிக ளென்ன
    ஒளிமின்னிப் பிறழ்ந்துபிறழ்ந் தலையும் மீன்கள்;
ஓடிவருந் தென்றலிலே புலர வைத்த
    ஒள்ளியமெல் லாடையென அலைகள் செல்லும்;
ஆடியவர் மனங்குளிர நலமே கூட்டும்
    அரியநறுந் தண்புனல்சேர் சுனைகள் உண்டு.1

வான்பொய்த்த காலத்தும் சுனையின் ஈட்டம்
    வற்றாத புனல்சுரந்து வளமை காட்டும்;
மான்மொய்த்துத் திரிகின்ற சாரல் எல்லாம்
    வளவியவேய் நெல்விளைந்து செழுமை காட்டும்;
தேன்கைத்த தென்னநறுஞ் சுளைகள் நல்குந்
    தீம்பலவின் பழம்முதிர்ந்து கனிவு காட்டும்;
மீன்மொய்க்குஞ் சுனைகளெலாம் *இறாலு டைந்து
    மேலிருந்து தேன்சொரிய இனிமை காட்டும்.2

அகழ்வார்க்குப் பசிகளையக் கிழங்கு நல்கி
    அங்கங்கே கொடிவள்ளி படர்ந்தி ருக்கும்;
முகில்பார்க்கும் பொழுதெல்லாம் மயிலின் கூட்டம்
    முழுமகிழ்வால் தோகைவிரித் தாடி நிற்கும்;


*இறால் - தேன்கூடு.