பக்கம் எண் :

தமிழ் முழக்கம்171

பகல்பார்க்க இயலாமல் அடர்ந்த சோலைப்
    பசுங்கிளிகள் தமிழ்பயிலும்; குருவிக் கூட்டம்
மிகவார்க்கும்; மரந்தோறுந் தாவித் தாவி
    *மேவனதாம் செய்தொழுகும் மந்திக் கூட்டம்.3

வளம்பலவும் நிறைந்திருக்கும்; வருவோர்க் கெல்லாம்
    வறுமையினைத் தொலைத்திருக்கும்; பகைமை பூண்டு
களம்புகுதும் வேந்தர்தமக் கரிதாய் நிற்கும்,
    கவிஞர்க்கும் விறலியர்க்கும் எளிதாய்த் தோன்றும்;
உளங்கவரும் பாவல்ல கபிலன் போன்ற
    ஒப்பரிய புலவர்தமைக் கொண்டி ருக்கும்;
துளங்கரிய பறம்புமலை, பாரி வாழ்ந்த
    தொன்னாளில் புகழ்மணக்க ஓங்கி நிற்கும்.4

பல்வளமும் நிறைந்திருந்து நலமே செய்த
    பறம்புதனைக் கொடுங்குன்றம் என்ற தேனோ?
சொல்வளமும் பொருள்வளமும் நிறைந்த பாடல்
    சொலும்புலவர் பலர்வளைத்து நின்ற தாலோ?
மல்வளமும் வில்வளமும் கொண்ட வேந்தர்
    மனம்புழுங்கிப் படைவளைத்து நின்ற தாலோ?
கொல்பகையால் அணுகவொணாக் கடுமை கண்டோ
    கொடுங்குன்றம் என்றதனை அழைத்தார் முன்னோர். 5

பாரிக்கே உரியதெனும் பறம்பு வெற்பைப்
    பாடுங்காற் கபிலனெனும் உணர்வு, நெஞ்சில்
பூரித்தே நின்றிருக்கக் காணு கின்றேன்;
    புலமையினாற் பாடுவதைக் கேட்டு வந்து
வாரித்தான் ஈவதற்குப் பாரி யில்லை;
    வள்ளலவன் இன்றிருப்பின் நாங்கள் இன்ப
வாரிக்குள் திளைத்திருப்போம் வறுமை என்னும்
    வன்பகையைத் தொலைத்திருப்போம் வாழ்வுங் காண்போம். 6


*மேவன - விரும்பியன.