பக்கம் எண் :

தமிழ் முழக்கம்173

9. செஞ்சொற் சிலம்பு

கலிவெண்பா

செஞ்சொற் சிலம்பிற் செறியுஞ் சுவையதனை
நெஞ்சிற் சிறிதே நினைத்தாலும் மெய்சிலிர்க்கும்;
சேரநன் னாட்டிற் செழித்துயர்ந்த நற்பலவைக்
கீறியதன் கோதகற்றிக் கிட்டுஞ் சுளையெடுத்துச்,
சேலத்து மாங்கனியுள் தேர்ந்த சிலஎடுத்து
மேலிட்ட தோல்சீவி மெல்லியநற் றுண்டாக்கி,
மாற்றுச் சுவையறியா மாமலையின் வாழைதரும்
தாற்றுக் கனியைத் தனியே உரித்தெடுத்துக்,
கோடுயர்ந்த வெற்பின் குறிஞ்சித்தேன் பெய்ததனில்
நீடுநனி ஊறியபின் நேருஞ் சுவைமுழுதும்10
செஞ்சொற் சிலம்பில் செறிந்திருக்கும்; அச்சுவையை
விஞ்சும் படியும் விளைந்திருக்கும்; அந்நூலை
ஆழ்ந்து பயின்றால் அறிவெல்லாம் நன்கினிக்கும்;
சூழ்ந்து நினையுங்கால் சொல்லரிய பேரின்பம்
நெஞ்சில் விளைந்து நிலைத்திருக்கும்; சொல்லுங்கால்
அஞ்சுபுல னெல்லாம் அடங்கி ஒருபுலனாம்
வண்ணம் இனித்திருக்கும்; வாலறிவன் பாச்சுவையின்
வண்ணம் முழுதுரைக்க வாயொன்று போதாதே!