பக்கம் எண் :

18கவியரசர் முடியரசன் படைப்புகள் - 3

எவ்வழி ஆடவர் நல்லவர் உளரோ
அவ்வழி நிலனும் நன்றென அவ்வை
ஓதிய துணர்க! உயர்நிலை பெறுக!
மேதினி ஓங்குக” என்றனன் மேலோன்;
எவ்வழி ஆடவர் எவ்வழி ஆடவர்
எனநான் புலம்பிட என்மனை யாட்டி
அவ்வுரை கேட்டே ஆடவர் வீரம்
கனவில் தானோ காட்டுவ தென்றாள்;
கண்விழித் தெழுந்தேன் கம்பனைக் காணேன்
*பெண்டிர் எழுந்து பேசமுன் வந்தால்
ஆடவர் பேசா தடங்குதல் உண்மை
அதனால் யானும் அமைதலும் நன்றே,(21)

தலைப்பு:கம்பன் கண்டபடி - ஆடவர்

இடம்:கம்பன் திருநாள் - காரைக்குடி

நாள்:18.3.1954


* பெண்டிர் எழுந்து பேசமுன் வந்தால் என்றது அடுத்துப் பெண்டிர் என்னும் தலைப்பில் பாட வந்தவரைக் குறிக்கும்.