பக்கம் எண் :

கவியரங்கில் முடியரசன் 19

3. எண்ணம்

எண்சீர் விருத்தம்

விண்கோள்கள் போலுமிளங் கவிஞர் கூட்டம்
    விளக்கமுற ஒளிநல்கும் பரிதி யே!எம்
கண்போலும் தமிழ்காக்கும் மறவர் ஏறே!
    கவிதையினால் உளங்கவர்ந்த கள்வா! இந்த
மண்மீது நல்லறமே புரிந்து வாழும்
    வள்ளல்தரும் கல்லூரி பயில்வீர்! நல்ல
பண்பூறக் கல்விதரும் பெரியீர்! ஈண்டிப்
    பாவரங்கில் அணிசெய்வீர்! வணக்கம் கொள்க(1)

பழைய எண்ணங்கள்

*பகைதவிர்ந்து நண்புற்று மெல்ல வந்து
    பலசொல்லி இரப்பாரேல் உயிரும் ஈவேன்
**மிகைவிஞ்சி என்வலிமை இகழ்வா ராயின்
    வேங்கையினை இடர்குருடர் ஆவர்; யானை
அகல்காலிற் படுமுளைபோற் பொன்றச் செய்வேன்;
    அழித்திலனேல் என்மாலை, பொருளை நச்சி***
நகுமகளிர் ¶முயக்கிடையே குழைக என்றான்
    நலங்கிள்ளி; பிறர்மனையை நோக்கா எண்ணம்(2)


**மிகை விஞ்சி - தருக்குற்று, ***நச்சி - விரும்பி, ¶முயக்கு - கலவி
* இப்பாடல் புறநானூற்றுப் பாடற் கருத்து