பக்கம் எண் :

20கவியரசர் முடியரசன் படைப்புகள் - 3

*புலவர்பெருஞ் சித்திரனார் வறுமை போக்கப்
    புரவலர்பாற் பலபரிசில் பெற்று வந்து
குலமனையாள் கைக்கொடுத்து, நயந்தோர்** யார்க்கும்
    கூடிமகிழ் உறவினர்க்கும் பிறர்க்கும் நல்கி,
நலம்நுகர நாளைக்குத் தேவை என்று
    நயவாமல், என்னொடுஞ்சூ ழாமல்,*** நல்கிச்
செலவழித்து மகிழ்வோம்நாம் எனப்பு கன்றார்;
    செல்வத்துப் பயனீதல் காட்டும் எண்ணம்(3)

விருந்தயரும் பெருங்களிப்பால் வடக்கில் வாழ்வோர்
    விளைவறியார் தென்புலத்து வேந்தர் வீரம்
குறைந்ததென இகழ்ந்துரைத்தார்; அதனைக் கேட்டுக்
    கோளரிபோல் வெகுண்டெழுந்து தமிழர் ஆற்றல்
புரிந்துகொளச் செய்தான்அச் சேரன்; யாரும்
    புகழ்மிக்க தமிழினத்தைப் பழித்து ரைத்தால்
எரிந்தெழுதல் தமிழனுக்குக் கடமையாகும்
    என்கின்ற இனப்பற்றைக் காட்டும் எண்ணம்(4)

தன்பால்வந் திரந்தோனுக் கில்லை என்னான்
    தலைதந்தான் ஒருகுமணன்; பாடல் கேட்கும்
அன்பார்வம் தலைதூக்க அரிய நெல்லிக்
    கனியொன்றை அதியனுமோர் அவ்வைக் கீந்தான்;
வன்பாலை நடந்தயர்ந்தோன் முரசம்¶ வைத்து
    வணங்குகட்டில் எனஅறியா துறங்க, வேந்தன்
அன்பாக அருகிருந்து கவரி வீசி‡
    அகமகிழ்ந்தான்; தமிழறிந்து மதிக்கு மெண்ணம்(5)


* இப்பாடல் புறநானுற்றுப் பாடற் கருத்து
**நயந்தோர் - விருமபியவர்கள், ***சூழாமல் - கேட்காமல்
¶முரசு கட்டிலில் உறங்கியவர் - மோசி கீரனார் ‡கவரி வீசிய வேந்தன் - சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை