பக்கம் எண் :

184கவியரசர் முடியரசன் படைப்புகள் - 3

11. ஊர்வலக் காட்சி

கலிவெண்பா

பேருலகில் நான்குமொழி பெற்றாலும் இன்றுவரை
சீரிளமை குன்றாத தெய்வத் திருமகளே,
ஆடிப் பெருக்காலும் ஆர்த்த நெருப்பாலும்
வாடிச் சிதையாமல் வாழ்ந்து வருபவளே,
பொங்கிச் சினந்தெழுந்து போராட வந்தகடல்
சங்கத்து வைத்திருந்த சான்றோர்தம் ஏடுபல
கொள்ளைகொண்டு போனாலுங் கோலஞ் சிதையாமல்
உள்ள தமிழரசி ஒப்பில்லா வாழ்வரசி,
மூவேந்தர் ஆட்சி முடிந்தபினர் யார்யாரோ
கோவேந்தர் என்றிங்குக் கோலேந்தி வந்தவர்கள்10
அவ்வவர்தம் தாய்மொழிக்கே ஆக்கங்கள் தந்தாலும்
செவ்வியநல் லாற்றல் சிதையாமல் நிற்பவளே,
ஆழக் கடலலைகள் ஆர்த்துப் பெருங்குழுவாய்ச்
சூழத் தொடர்ந்து தொடுகரையை நோக்கிவரும்
நீண்ட கடல்போல் நெடுங்களிப்பால் மாந்தரினம்
ஈண்டிவரக் கண்டே இறும்பூது கொள்கின்றேன்;
ஈதென்ன தாயே எனவினவ, அவ்வன்னை
காதருகில் வந்ததனைக் காட்டித் ‘திருமகனே,
ஞாலமெலாந் தேமதுர நல்லோசை கேட்டிடவே
கோலமிகு மாநாடு கூட்டிக் களிக்கின்றார்;20
வந்துவெளி நாட்டார் வணக்கஞ் செலுத்துகிற
அந்தத் திருநாளில் ஆர்த்துவருங் கூட்டமடா;