பக்கம் எண் :

தமிழ் முழக்கம்185

என்றன் புகழ்காக்க ஈடில்லாப் பேருழைப்பை
அன்று கொடுத்துயர்ந்த அன்புமிகு சான்றோர்க்கு -
அலையெழுப்பும் ஆழி அடைகரையில் நல்ல
சிலையெழுப்பிப் போற்றுஞ் சிறப்பனைத்துங் காணுதி நீ;
யாதும்நம் ஊராக யாவரும்நம் கேளிரென
ஓதும் மொழியால் உலகந் திரண்டதைப்பார்;
மண்ணில் தரைதெரிய மாட்டா தணிவகுத்துக்
கண்ணைக் கவர்ந்து கருத்தை மகிழ்விக்க30
ஊர்ந்துவரும் ஊர்வலத்தில் உள்ளக் கிளர்ச்சியுடன்
சேர்ந்துவரும் மக்கள் செறிந்திருக்குங் காட்சியடா;
நீண்டதுதிக் கையை நிமிர்த்துப் பெருங்களிறு -
ஆண்டு நடந்துவர அக்களிற்றைப் பின்தொடர்ந்து
காவடிகள் நல்ல கரகங்கள் ஆடிவரப்
பூவடியர் நாட்டுப் புறமாதர் போலழகுப்
பாவையர்கள் ஆடிவரும் பாங்கெல்லாம் இங்கேகாண்;
யாவையுமுன் கண்ணால் அழகுறவே காணங்கே;
நாட்டின் பழங்கருவி நாத சுரக்கருவிப்
பாட்டின் ஒலிகேட்டுப் பாடுகநீ பாவலனே;40
வண்ணக் கொடிபிடித்து வஞ்சியருங் காளையரும்
நண்ணிப் படர்கின்ற நல்லழகைப் பாரங்கே;
கட்டழகுப் பெண்மகளிர் காலிற் சதங்கைகட்டி
இட்டடிகள் மாறா தெடுத்தாடும் நாட்டியங்காண்;
எப்படையும் இப்படைக் கீடில்லை என்றுரைக்க
முப்படையாய் மொய்த்திங்கு முன்னேறும் வீரரைப்பார்;
செந்தமிழைக் காக்குஞ் சிறப்புடைய வேற்குமணன்
வந்தஒரு பாவலர்க்கு வாய்த்த தலைகொடுக்க
வாளெடுத்த வள்ளல் வடிவத்தைக் காட்டுமிந்த
நாளெடுத்த ஊர்வலத்தை நாட்டமொடு கண்டிடுநீ;50