பக்கம் எண் :

186கவியரசர் முடியரசன் படைப்புகள் - 3

அவ்வை நெடிதிருப்பின் அன்னைமொழி வாழுமெனச்
செவ்வை மனமுடையான் சீரதியன் நெல்லிக்
கனிகொடுத்த காட்சியிலே காட்டும் பணிவை
இனிதெடுத்து வந்த எழிலெல்லாம் பார்மகனே;
வார்முரசு கட்டிலிலே வந்து துயில்கின்ற
சீர்வரிசைப் பாவலர்க்குச் செங்கோல் அரசனங்கு
நின்றிருந்து வெண்கவரி நீள்கையால் வீசுகிற
அன்றிருந்த காட்சி அழகெல்லாங் காண்மகனே;
பாவேந்தர் தம்மைப் பணிந்து மதித்துவந்த
பூவேந்தர் ஆண்டிருந்த பொற்காலம் அக்காலம்;60
மீண்டுமொரு பொற்காலம் மீளத் திருவுளத்துப்
பூண்டெழுந்த என்மகனே போராட்டப் பாட்டெழுது;
ஆளும் பொறுப்பேற்றோர் ஆட்சி பிழைத்துவிடின்
வாழுமொரு பெண்ணும் வழக்குரைத்து நீதிபெறும்
நாடடா ஈதென்று நாளெல்லாஞ் சொல்பவளைப்
பாடடா கண்ணகியைப் பாரடா, முன்னைப்
*புறங்காட்டும் வீரர் புறங்காட்டாப் போரின்
திறங்காட்டி நிற்கின்ற தீரத்தைக் காட்டுகின்ற
கோட்டைப்போர்க் காட்சியினைக் கூர்ந்து மனத்திறுத்தி
நாட்டுக்கோர் பாட்டெழுதி நல்கி மகிழ்ந்திடுநீ;70
போரெடுத்துச் சென்ற புகல்களிற்றைப் பூட்டிநெற்
போரடித்த காட்சிப் பொலிவினையும் இங்கேகாண்;
பண்டைப் புகார்நகரில் பண்டங்கள் கொண்டுசெல
அண்டைப் பிறநாட்டார் அண்டிவருங் காட்சியைப்பார்;
நீலத் திரைக்கடலில் நீந்திவருங் கப்பலுடன்
கோலத் திருமுகத்தன் கொள்கைப் பெருங்கோமான்
செந்தமிழன் வீர சிதம்பரன் நிற்கின்றான்


*புறம்காட்டும் - புறநானூறுகாட்டுகின்ற.